இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை அய்யலூர் சந்தையில் ஆடுகள் வாங்க அலைமோதிய வியாபாரிகள்


இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை அய்யலூர் சந்தையில் ஆடுகள் வாங்க அலைமோதிய வியாபாரிகள்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக, அய்யலூர் சந்தையில் ஆடுகள் வாங்க வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டு சந்தையாக அய்யலூர் திகழ்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு அய்யலூரை சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி, எலமனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்திலேயே அய்யலூர் சந்தையில் தான் அதிகளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை விலைக்கு வாங்க அதிகளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

போட்டா போட்டி

இதனால் போட்டி போட்டு ஆடுகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். வறட்சியின் காரணமாக ஆடுகளுக்கு போதிய தீவன வசதி இல்லாததால் ஆடுகளின் விலை குறைந்திருந்தது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.2,500 முதல் ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததால் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று சந்தையில் ஆடு, கோழிகள் வாங்க வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. சரக்கு வாகனங்களில் குவிந்ததால் திருவிழா கூட்டம் போல் சந்தை களை கட்டியது. இதனால் ஆடுகள் வாங்க போட்டா, போட்டி ஏற்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்று 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 3,500 முதல் ரூ.4,000 வரை விலை போனது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கோழிகள் எதிர்பார்த்தபடி விலை போகவில்லை.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது இறைச்சிக்கு மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இத்ை-தொடர்ந்து, ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதுவும் ஆடுகளின் விலை உயர்வுக்கு காரணம் என்றனர்.

Next Story