மத்திய அதிவிரைவு கமாண்டோ படை போலீசார் அணிவகுப்பு அச்சத்தை போக்க நடவடிக்கை


மத்திய அதிவிரைவு கமாண்டோ படை போலீசார் அணிவகுப்பு அச்சத்தை போக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மத்திய அதிவிரைவு கமாண்டோ போலீசார் அணிவகுப்பு நடத்தினர். மேலும் 4 நாட்கள் குமரி மாவட்டப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

நாகர்கோவில்,

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு பிரிவாக ‘ரேப்பிட் ஆக்சன் போர்ஸ்’ என்ற அதிவிரைவு கமாண்டோ போலீஸ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதன் தலைமையிடம் கோவையில் அமைந்துள்ளது. இங்குள்ள கமாண்டோ போலீசார் தமிழகத்தில் சாதி, மத, மொழி மோதல்களால் பதற்றம் நிறைந்த மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று அந்த மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.

பதற்றம் நிறைந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். எனவே எதற்கும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று உணர்த்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கமாண்டோ போலீசார் ஒவ்வொரு ஆண்டும் அணிவகுப்பு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அணிவகுப்பு

குமரி மாவட்டத்திலும் இந்த கமாண்டோ போலீசார் கடந்த சில ஆண்டுகளாக வந்து அணிவகுப்பு நடத்தி செல்கிறார்கள். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த கமாண்டோ போலீசார், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரகுமார் தலைமையில் குமரி மாவட்டம் வந்தனர். இதில் துணை சூப்பிரண்டு கிளாரன்ஸ், 2 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 56 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பின்னர் கமாண்டோ போலீசார், கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து பேசினர். இதையடுத்து நேற்று முதல் மாவட்டப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். முதல் நாளான நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அதன்பிறகு கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் வழிகாட்டுதலின்பேரில் கோட்டார் பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினர்.

மேலும் 4 நாட்கள்...

முதலில் கோட்டார் இடலாக்குடியில் இருந்து  அணிவகுப்பு தொடங்கியது. பின்னர் பறக்கை ரோடு சந்திப்பு, இளங்கடை, வெள்ளாடிச்சிவிளை, ரகுமத்கார்டன் உள்ளிட்ட  பகுதிகளில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதனால் அணிவகுப்பு நடைபெற்ற பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கமாண்டோ போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) தக்கலை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், நாளை (சனிக்கிழமை) குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், 11–ந் தேதி சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், 12–ந் தேதி புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் மேலும் 4 நாட்கள் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர். மொத்தம் 5 நாட்கள் குமரி மாவட்டத்தில் அணிவகுப்பு நடத்தும் மத்திய கமாண்டோ போலீசார் வருகிற 13–ந் தேதி மீண்டும் கோவை       புறப்பட்டு செல்கிறார்கள்.              

Related Tags :
Next Story