இரு வாரத்தில் 3 மான்கள் சாவு; இரைதேடி வந்து உயிரிழக்கும் பரிதாபம்


இரு வாரத்தில் 3 மான்கள் சாவு; இரைதேடி வந்து உயிரிழக்கும் பரிதாபம்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:25 AM IST (Updated: 9 Jun 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இருவார காலத்தில் இரைதேடி வந்த 3 மான்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

நாமக்கல்,

இதுபோன்ற இறப்புகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராணிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

3 மான்கள் சாவு

நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக இரைதேடி வரும் மான்கள் நாய்கள் கடித்து இறந்து விடும் பரிதாப சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5-ந் தேதி பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளம் பகுதிக்கு இரைதேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்தது.
இதேபோல் கடந்த 3-ந் தேதி சேந்தமங்கலம் வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் இரைதேடி வந்த புள்ளிமான் ஒன்று நாய்கள் துரத்தியதில் தவறி விழுந்தது. இந்த மானை அங்கு விரைந்து சென்ற நாமக்கல் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். இருப்பினும் அது சிகிச்சை பலன்இன்றி இறந்தது.

கடந்த மே மாதம் 23-ந் தேதி புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் ஊராட்சி தேவாகவுண்டம்பாளையம் பகுதிக்கு இரைதேடி வந்த புள்ளிமான் அப்பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு செல்வதற்குள் அந்த மான் தண்ணீரில் மூழ்கி இறந்தது. இவ்வாறு கடந்த மே மாதம் 23-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை உள்ள இரு வார காலகட்டத்தில் மட்டும் 3 மான்கள் இறந்து உள்ளன. இது பிராணிகள் நல ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று இரைதேடி ஊருக்குள் வரும் மான்களை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மான் பூங்கா

இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- திருச்சி மாவட்டம் முக்கொம்பு மான் பூங்காவில் இருந்து தப்பி வரும் புள்ளிமான்கள் காவிரி ஆற்றின் ஓரமாக தலமலை பகுதிக்கு வருகின்றன. பின்னர் அங்கிருந்து இரைதேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுகின்றன. தொடர்ந்து அவை நாய்கள் கடித்தோ அல்லது நாய்கள் துரத்தியதில் காயம் ஏற்பட்டோ இறந்து விடுகின்றன.

பொதுவாக மான்கள் மிகவும் லேசான காயம் ஏற்பட்டாலே இறந்து விடும். இதனால் காயங்கள் ஏற்பட்ட மான்கள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்து, உயிரை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் பலன் அளிப்பது இல்லை. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மான்களை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் அவற்றை பிடித்து, பாதுகாப்பான பகுதிகளில் கொண்டுபோய் விட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story