நாமக்கல்லில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


நாமக்கல்லில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 8 Jun 2017 9:58 PM GMT (Updated: 8 Jun 2017 9:58 PM GMT)

நாமக்கல்லில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்பான கல்வி, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் அனைத்து வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அரசு பள்ளியில் படிக்கிற மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான சலுகைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் சிறப்பாக பணியாற்றி மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வி அறிவை புகட்டி வருகின்றனர்.

விலையில்லா சீருடை

நாமக்கல் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 756 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 பாடக்குறிப்பேடுகளும், 70 ஆயிரத்து 128 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துண்டு பிரசுரங்கள்

தொடர்ந்து அவர் தீவிர மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, தீவிர மாணவர் சேர்க்கை குறித்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செல்வராஜ், நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்க பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உழவன் தங்கவேல், கிராம கல்விக்குழு தலைவர் பாலச்சந்திரன், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அன்பழகன், பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

எருமப்பட்டி

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வாகன பிரசாரம் எருமப்பட்டி வட்டார வளமையத்தில் நடந்தது. ஊர்வலத்தை எருமப்பட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரும்பார் குழலி, மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் நந்தினி மற்றும் எருமப்பட்டி வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த வாகன பிரசாரம் மூலம் எருமப்பட்டி, வரகூர், பவித்திரம் போன்ற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மாணவர்களுக்கு செயல்படுத்தும் ஆக்கபூர்வமான இலவச திட்டங்கள் பற்றியும், தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்துவித மாணவர் சார்ந்த நலத் திட்டங்கள் பற்றியும் மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். இதில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களையும் பள்ளியில் சேர்க்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை எருமப்பட்டி ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Next Story