மாவட்டம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை செயல்அலுவலர் பணிக்கான போட்டி தேர்வு நாளை தொடங்குகிறது


மாவட்டம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை செயல்அலுவலர் பணிக்கான போட்டி தேர்வு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 Jun 2017 10:06 PM GMT (Updated: 2017-06-09T03:36:40+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வு நாளை (சனிக் கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

நாமக்கல்,

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போட்டி தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-3 மற்றும் நிலை-4 பணிகளுக்கான போட்டி தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளன.

இதையொட்டி நாளை, நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லூரி, செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மொத்தம் 1,836 விண்ணப்பதாரர்களும், நாளை மறுநாள், மேற்குறிப்பிட்ட 3 கல்லூரிகள் மற்றும் கிங் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மொத்தம் 2,530 விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 4,366 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

சிறப்பு பஸ் வசதி

இத்தேர்வில் நாளை 6 முதன்மை கண்காணிப்பாளர்களும், நாளைமறுநாள் 8 முதன்மை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இப்பணிக்காக துணை கலெக்டர் நிலையில் ஒரு பறக்கும் படை அலுவலரும், துணை தாசில்தார் தலைமையில் நாளை 2 நடமாடும் குழுவினர்களும், நாளைமறுநாள் 3 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வுக்கூடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்். அனைத்து இணையதள மையங்களும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் 2 நாட்களும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

செல்போனுக்கு தடை

தேர்வு மையத்தில் தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனி வருங்காலங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும். எனவே அனைத்து தேர்வர்களும் தேர்வாணைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் எதையும் கொண்டு வரக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story