சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை


சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2017 10:34 PM GMT (Updated: 8 Jun 2017 10:34 PM GMT)

குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டபிரிவுகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளி இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் விஜய்பாபு (பொது), கலைச்செல்வி (சத்துணவு), மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரண்யா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சம்பத் தெரிவித்ததாவது:-

55 இல்லங்கள்

குழந்தைகள் வருங்கால சமுதாயத்தின் சொத்துக்கள் என்பதை உணர்ந்து அனைத்து தரப்பினரும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்கள் 3-ம், அரசு நிதியுதவி பெரும் பராமரிப்பு இல்லங்கள் 5-ம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 47 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் என மாவட்டத்தில் 55 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்படும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி குறைந்தபட்ச தரநிர்ணயங்கள் கடைபிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் 7 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பிடம், 10 குழந்தைகளுக்கு ஒரு குளியல் அறை, 50 குழந்தைகளுக்கு ஆற்றுனர், மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட 14 அலுவலர்களும், முதலுதவி அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்து உறுதிசெய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி ஏதேனும் காப்பகங்கள் இயங்குகிறதா? என்பது குறித்து அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டபிரிவுகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செல்போன் எண்ணிற்கு 98942-10182 அல்லது 98945- 18260 புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story