ரூ.5–க்கு 20 லிட்டர் குடிநீர் திட்டத்துக்கு வெள்ளோட்டத்துடன் மூடுவிழா பொதுமக்கள் கடும் அதிருப்தி


ரூ.5–க்கு 20 லிட்டர் குடிநீர் திட்டத்துக்கு வெள்ளோட்டத்துடன் மூடுவிழா பொதுமக்கள் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 10 Jun 2017 2:15 AM IST (Updated: 9 Jun 2017 11:25 PM IST)
t-max-icont-min-icon

ரூ.5–க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் வெள்ளோட்டத்துடன், மூடுவிழா கண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மீளவிட்டான் பகுதியில் ரூ.5–க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் வெள்ளோட்டத்துடன், மூடுவிழா கண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மீளவிட்டான் உள்ளிட்ட 5 பஞ்சாயத்துகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரை சுத்திகரித்து பொதுமக்களின் குடிநீர் உபயோகத்துக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி, தூத்துக்குடி மீளவிட்டான் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

20 லிட்டர்

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. இங்கு பொதுமக்கள் ரூ.5 செலுத்தி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு உள்ள எந்திரத்தில்(காயின் பாக்ஸ்) 5 ரூபாய் நாணயத்தை போட்டவுடன், அருகில் உள்ள குழாயில் இருந்து 20 லிட்டர் தண்ணீர் வரும். அதனை பொதுமக்கள் பிடித்துக் கொள்ளலாம் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மூடுவிழா

இந்த திட்டத்துக்கான சோதனை ஓட்டம் கடந்த மாதம் 10–ந் தேதி நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது. இதையொட்டி இந்த திட்டம் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் அவ்வப்போது குடிநீருக்காக சுத்திகரிப்பு நிலையம் பகுதிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

விரைவில் இந்த சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படும் என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் அந்த குடிநீர் விற்பனை நிலையம் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்த நிலையில் மக்கள் குடிநீர் பிடிக்கும் பகுதியில் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ் அனைத்தும் பெயர்ந்து விழுந்து உள்ளன. குடிநீர் விற்பனை நிலையம் உருக்குலைந்து கிடக்கிறது. திறப்பு விழா காணாமலேயே இந்த திட்டம் மூடுவிழா கண்டிருப்பது, அந்த பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story