கோவில்பட்டியில், ஆட்டோ டிரைவரை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? கைதான நண்பர்கள் 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்
கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய நண்பர்கள் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய நண்பர்கள் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? என அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
ஆட்டோ டிரைவர் கொலைகோவில்பட்டி ஜோதி நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பாக்கியநாதன். பழைய இரும்பு வியாபாரி. இவருடைய மகன் ராஜா(வயது 26). ஆட்டோ டிரைவர். இவருக்கு முத்துமாரி(23) என்ற மனைவியும், மாரி செல்வம்(3), ராஜாசிங்(1) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ராஜா தனது மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் கோவில்பட்டி அருகே உள்ள கசவன்குன்று காட்டு பகுதியில் ராஜா, மர்ம நபர்களால் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நண்பர்கள் 5 பேர் கைதுபோலீசாரின் விசாரணையில், ராஜாவின் நண்பர்களே அவரை தீர்த்து கட்டியது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவருடைய நண்பர்களான கோவில்பட்டி கருணாநிதி நகரை சேர்ந்த ஏசுராஜ் மகன் அந்தோணிராஜ்(25), ராமர் மகன் சுடலைமணி(23), ஆதி சுபேந்திரன் மகன் தங்கராஜ்(22), கணேஷ் முருகன் மகன் காளிமுத்து(21), முருகேசன் மகன் வெங்கடேஷ்(24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரும் கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.
கைதான 5 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
டாஸ்மாக் கடை முன்பு தகராறுநாங்கள் 5 பேரும் கூலி வேலை செய்து வருகிறோம். ஆட்டோ டிரைவரான ராஜா எங்களுடைய நண்பர். நாங்கள் அனைவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். கடந்த மாதம் கோவில்பட்டி–பசுவந்தனை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நாங்கள் 5 பேரும் மது குடித்தோம். ராஜா அன்று எங்களுடன் வரவில்லை.
மது குடித்து விட்டு வெளியே வந்த நாங்கள், பசுவந்தனை ரோட்டில் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென மேற்கு போலீசார் வந்து எங்கள் 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விட்டனர். பின்னர் நாங்கள் ஜாமீனில் வெளியே வந்தோம்.
ராஜா மீது ஆத்திரம்ராஜாதான் எங்களை போலீசில் காட்டி கொடுத்ததாக நாங்கள் கருதினோம். இதனால் அவர் மீது எங்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி கடந்த 7–ந்தேதி இரவில் அவரை மது குடிக்க வருமாறு செல்போனில் அழைத்தோம். உடனே அவரும், தனது மோட்டார் சைக்கிளில் மது குடிக்க வந்தார்.
நாங்கள் அனைவரும் கோவில்பட்டி ஜோதி நகரில் மது குடித்தோம். ராஜா மது போதையில் மயங்கியவுடன், அவரது மோட்டார் சைக்கிளிலேயே அவரை ஏற்றி வைத்து, கசவன்குன்று காட்டு பகுதிக்கு கொண்டு சென்றோம். எங்களுடைய 2 மோட்டார் சைக்கிள்களையும் அங்கு கொண்டு சென்றோம்.
கழுத்தை அறுத்து கொலைமது மயக்கத்தில் இருந்த ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தோம். அவருடைய உடலை அங்கேயே போட்டு விட்டு, அருகில் அவருடைய மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி விட்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர். இந்த கொலைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.