அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 12–ந் தேதி பெங்களூரு வருகிறார் சித்தராமையா தகவல்


அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 12–ந் தேதி பெங்களூரு வருகிறார் சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2017 2:30 AM IST (Updated: 10 Jun 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 12–ந் தேதி பெங்களூரு வருகிறார் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 12–ந் தேதி பெங்களூரு வருகிறார் என்று சித்தராமையா கூறினார்.

காங்கிரஸ் மீண்டும் வெற்றி

கர்நாடக சட்டசபை காங்கிரஸ் குழு கூட்டம் அதன் தலைவரான முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:–

57 தொகுதிகளில் மக்களின் மனநிலை குறித்து கருத்து கேட்டு அறியப்பட்டுள்ளது. இதில் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும். கருத்து கேட்கப்பட்ட தொகுதிகளில் சில இடங்களில் குறைகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது. நானும், கட்சியின் தலைவரும் உட்கார்ந்து ஆலோசித்து அந்த குறையை போக்குவோம்.

மக்களை சந்தித்து பேசுங்கள்

நீங்கள் உங்கள் தொகுதிகளை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். நமது கட்சியில் 123 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த 123 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெறுவது உங்களுடையே பொறுப்பு. நீங்கள் மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் குறைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் உங்களின் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து பேசுங்கள். நமது அரசு இதற்கு முன் எப்போதும் செயல்படுத்தாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதுபற்றி அடிக்கடி மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள். தொகுதிகளில் தீராத பிரச்சினைகள் இருந்தால் அதுபற்றி உடனே அரசின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.

பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும்

இது தேர்தல் ஆண்டு. பிரச்சினைகளை தீர்ப்பதை தள்ளிப்போட வேண்டாம். மந்திரிகள் அவ்வப்போது வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். 4 மண்டலங்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியை தீவிரமாக செய்ய வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும்.

அதிகளவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சரியாக செயல்படாவிட்டால், அதுபற்றி கட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார். அரசு மற்றும் கட்சி இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். அரசு அமல்படுத்திய திட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்து உள்ளது என்பது குறித்து மாதந்தோறும் கட்சியின் மாநில தலைவருடன் ஆலோசனை நடத்துவேன்.

ராகுல் காந்தி வருகிறார்

வருகிற 12–ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட பெங்களூரு வருகிறார். இதில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி வெற்றிபெற நீங்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story