கடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை குமாரசாமி குற்றச்சாட்டு
எச்.டி.குமாரசாமி நேற்று மைசூருவில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
மைசூரு,
ஜனதாதளம் (எஸ்)கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எச்.டி.குமாரசாமி நேற்று மைசூருவில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
சாமி தரிசனம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–
முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு மக்கள் பயன்பெறும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் மாநில மக்களை ஏமாற்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி பல மாவட்டங்களில் சாதனை மாநாடு நடத்தி அரசு பணத்தை வீணாகி வருகின்றன.
இதேபோல் விஸ்வநாத்தை ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர்த்து கொள்வது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கட்சியில் நேர்மையாக உழைக்க தயாராக யார் இருந்தாலும் அவர்களை எங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வோம். ஆனால் அவர் எங்கள் கட்சியில் இணைவது குறித்து எங்களிடம் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.