‘சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க பா.ம.க. தயார்’ கரூரில் ஜி.கே.மணி பேட்டி


‘சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க பா.ம.க. தயார்’ கரூரில் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2017 4:30 AM IST (Updated: 10 Jun 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க பா.ம.க. தயார் நிலையில் உள்ளது என்று ஜி.கே.மணி கூறினார்.

கரூர்,

கரூரில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழில் வளர்ச்சி

நாட்டில் விவசாயத்தையும், தொழில் வளர்ச்சியையும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதை தவிர்த்து தமிழகத்தில் முதலீடு செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும். கரூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ளி வினியோகிப்பதில் முறைகேடு நடக்கிறது. மழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை சந்திக்க தயார்

சரக்கு, சேவை வரி உயர்வால் ஜவுளி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும். ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் பா.ம.க. சந்திக்க தயாராக உள்ளது. மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன், மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story