பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விவகாரம் குறித்து சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் பிரச்சினை கிளப்பினார்


பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விவகாரம் குறித்து சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் பிரச்சினை கிளப்பினார்
x
தினத்தந்தி 9 Jun 2017 8:30 PM GMT (Updated: 9 Jun 2017 7:53 PM GMT)

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விவகாரம் குறித்து சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் பிரச்சினை கிளப்பினார். இதற்கு திங்கட்கிழமை பதிலளிப்பதாக மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு,

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விவகாரம் குறித்து சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் பிரச்சினை கிளப்பினார். இதற்கு திங்கட்கிழமை பதிலளிப்பதாக மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.

பிளாஸ்டிக் அரிசி

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 5–ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 5–வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்தில் கேள்வி நேரத்தை தொடர்ந்து, பூஜ்ஜிய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், “கர்நாடகத்தில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் வந்த பிறகு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை இந்த சபைக்கு தெரிவிக்க வேண்டும்“ என்றார்.

சாத்தியம் இல்லை

ஜெகதீஷ் ஷெட்டரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி, “கொப்பல் மாவட்டம் ஸ்ரீராமபுராவில் உள்ள ரே‌ஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் ஆகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்பது குறித்து அரசு சொல்ல வேண்டும்“ என்றார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார், “இது தொடர்பாக அறிக்கை வரும். இதுபோல் செய்ய சாத்தியம் இல்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கலப்படம் என்பது சகஜமானது. ஆனால் பிளாஸ்டிக்கால் செய்தால் அதற்கு செலவு அதிகமாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையும் நாம் கவனிக்காமல் விடமுடியாது. அறிவியல் பூர்வமாக இது சாத்தியமா?, இது எங்கிருந்து உற்பத்தியாகிறது, இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து வருகிற திங்கட்கிழமை விவரமான பதில் அளிக்கப்படும்“ என்றார்.

பீதி அடைய தேவை இல்லை

அப்போது உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி யு.டி.காதர் பேசுகையில், “மக்கள் பீதி அடைய தேவை இல்லை. அன்ன பாக்ய திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படமாக சாத்தியம் இல்லை. மத்திய அரசு தான் இந்த அரிசியை கொடுக்கிறது. சத்தீஷ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் அரிசியை மத்திய அரசு கர்நாடகத்திற்கு அனுப்புகிறது. அதனால் யாருக்கும் குழப்பம் வேண்டாம். ஒருவேளை இந்த அரிசியில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை கலப்படமாகி இருந்தால் அதை எடுத்து வந்து காட்டுங்கள்“ என்றார்.

மீண்டும் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “இது தொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள குழப்பங்களை தீர்க்க வேண்டும். விசாரணை நடத்துங்கள்“ என்றார். அத்துடன் இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.


Next Story