வீரப்பூர் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை- ரூ.60 ஆயிரம் கொள்ளை


வீரப்பூர் அருகே தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை- ரூ.60 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 10 Jun 2017 4:30 AM IST (Updated: 10 Jun 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

வீரப்பூர் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், சான்றிதழ் மற்றும் பொருட்களை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றனர்.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள காச்சக்காரன்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 49). தொழிலாளியான இவர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் கரூரில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர், தன்னுடைய மகனை விராலிமலையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் அவர், மகன் மற்றும் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து இலுப்பூருக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கினார்.

இந்நிலையில் நேற்று காலை காச்சக்காரன்பட்டியில் உள்ள சங்கரின் வீடு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் சங்கருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சங்கர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் வீட்டிற்குள் உள்ள பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 4 பவுன் நகை, கல்லூரிக்கு செலுத்த வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தீ வைத்து எரித்தனர்

மேலும் கொள்ளையர்கள் பீரோவில் இருந்த துணிகள் மற்றும் சான்றிதழ்கள், வீட்டுப்பத்திரம், அடையாள அட்டைகளையும், பொருட்களையும் எடுத்து கீழே போட்டு தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனால் வேதனை அடைந்த சங்கர் இது குறித்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், கொள்ளை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story