பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? கடை, ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? கடலூரில் கடை, ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
கடலூர்,
கடலூரில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என கடை மற்றும் அரிசி ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் அரிசிஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், அதை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பீதி ஏற்பட்டது. ஆனால் தமிழகத்திற்கும் இதுபோன்ற பிளாஸ்டிக் அரிசி உள்ளே நுழைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், இது தொடர்பாக எங்காவது இருந்து புகார் வந்தால், அதனடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கடலூரில் ஆய்வுஅதேநேரத்தில் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை சோதனை செய்ய அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் கடலூரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, நந்தகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் கடலூர் ஆல்பேட்டையில் உள்ள அரிசி ஆலையில் பிளாஸ்டிக் அரிசி இருக்கிறதா என திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் உள்ள அரிசி கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரிசி கடை, குடோன்கள் மற்றும் அரிசி ஆலைகள் ஆகியவற்றிலும் சோதனை செய்தனர்.
3 வழிமுறைகள்இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி கூறும்போது பிளாஸ்டிக் அரிசி என சந்தேகம் வந்தால் அதை கண்டறிய வழிமுறைகள் உள்ளன. ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீரை நிரப்பி அதில் சிறிதளவு அரிசியை போட வேண்டும். நல்ல அரிசியாக இருந்தால் அவை தண்ணீருக்கு அடியில் சென்று விடும். பிளாஸ்டிக் அரிசி என்றால் மிதக்கும்.
மேலும், கொதிக்கும் எண்ணையில் அரிசியை போட்டால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அவை உருகி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இதுபோன்ற முறைகளை கையாள்வதன் மூலம் பிளாஸ்டிக் அரிசியை நாம் கண்டுபிடித்து விடலாம்.
இதுபோன்று பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் அறிந்தால் அது பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கோ அல்லது வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமோ உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றார்.