இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: திண்டிவனத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டிவனம்
இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து திண்டிவனத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் குலாம்மொய்தீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் சையத்கலில், திராவிடர் கழகம் தாஸ், மனித நேய மக்கள் கட்சி சிவகாசி முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இறைச்சிக்காக மாடு, ஓட்டகம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளதை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று கூறி அனைத்து கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் செஞ்சி சிவா, ரமணன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.