குழந்தை தொழிலாளர் திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
குழந்தை தொழிலாளர் திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
தேனி,
குழந்தை தொழிலாளர் திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த சட்டம்–2016 குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தொழிலாளர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், போலீஸ் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, அரசு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:–
14 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிகளில் அமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தை தொழிலாளர் அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிகளில் அனுமதித்தால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களின் நலனுக்காக சம்பந்தப்பட்ட வேலை அளிப்பவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மற்றும் அரசின் பங்களிப்பாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதில் தமிழக அரசின் பங்குத்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குழந்தை தொழிலாளர் திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்மாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.