ஆக்கிரமிப்பு காரணமாக உடையகுளத்தை முழுமையாக சீரமைக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ஆக்கிரமிப்பு காரணமாக சின்னமனூர் அருகே உள்ள உடையகுளத்தை முழுமையாக சீரமைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சின்னமனூர்,
முல்லைப்பெரியாறு மூலம் சின்னமனூர் பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இங்கு ஆண்டு தோறும் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா நெல் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் 120 நாட்கள் ஆகும். இதற்கு இடைப்பட்ட காலங்களில் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை சமாளிக்க கருங்கட்டான்குளம், உடையகுளம், செங்குளம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
முல்லைப்பெரியாற்றில் இருந்து இந்த குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது குளத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 6 மாதம் வரை விவசாய பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. குளங்களில் ஆழப்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ளாமல் விட்டதாலேயே பாசனத்துக்கு தண்ணீர் தேக்க முடியவில்லை என விவசாயிகள் கருதினர்.
ஆக்கிரமிப்புஇதையடுத்து தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ரூ.10 லட்சம் செலவில் குளங்களை ஆழப்படுத்தி, கரைகளை சீரமைக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் தான் விவசாயத்தை பாதுகாக்கும் பொருட்டு மழை நீரை வீணடிக்காமல் குளங்களில் தேக்கி வைக்கும் வகையில் அவற்றை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகளை விவசாயிகளே மேற்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டது. ஆனால் குளங்களில் விவசாயிகளே சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இதற்கிடையே குளங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அதன்படி சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம், உடையகுளம், செங்குளம் ஆகியவற்றில் சீரமைப்பு பணிகளை விவசாயிகளே மேற்கொண்டனர். ஆனால் 78 ஏக்கர் பரப்பளவு கொண்ட உடையகுளம் தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டதால் 28 ஏக்கர் பரப்பளவாக சுருங்கியுள்ளது. அந்த பகுதியில் மட்டும் விவசாயிகள் தற்போது சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து குளத்தை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து எடுக்கப்படும் மண்ணை தோட்ட பயன்பாட்டுக்கே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், உடையகுளத்தில் ஏக்கர் கணக்கிலான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்டு எங்களால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. ஆக்கிரமிப்பு நிலங்கள் போக மீதி உள்ள இடத்திலேயே சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதனால் குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.