வைகை அணையில் காட்சிப்பொருளான படகு குழாம்


வைகை அணையில் காட்சிப்பொருளான படகு குழாம்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:45 AM IST (Updated: 10 Jun 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி வைகை அணையில் அமைக்கப்பட்ட படகு குழாம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இது விளங்குகிறது. வைகை அணைப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் நலனுக்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் அணையை பார்வையிடுவதற்காக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வைகை அணைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் வைகை அணை பூங்காவில் உள்ள பொழுது போக்கு அம்சங்களை மேம்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

படகு குழாம்

அதன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் புல்தரைகள், குழந்தைகளை கவரும் பொம்மைகள், செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், படகு குழாம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இதில் வைகை அணை வலதுகரை பகுதியில் படகு குழாம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து குழாம் பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் பெடல்கள் மூலம் இயங்கும் 5 படகுகள் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் சோதனை ஓட்டம் முடிந்தும் படகு குழாம் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் அணையை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி திறக்கப்படாமல் உள்ளதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

காட்சி பொருளானது

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், படகு குழாம் அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. குழாம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் சேதமடைந்து வருகிறது. அணையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் படகு குழாம் இருப்பதை பார்த்து வேகமாக அப்பகுதிக்கு செல்கின்றனர்.

ஆனால் குழாம் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக இருப்பதை பார்த்து ஏமாற்றமடையும் நிலையே தற்போது வரை உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள படகு குழாமை இனியாவது பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இம்மாத இறுதியில்...

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது, வைகை அணை வலதுகரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2, 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் படகுகள் இயக்கப்படும்.

இதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யும் படகிற்கு ரூ.90–ம், 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் படகிற்கு ரூ.170–ம் கட்டணமாக நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.


Next Story