ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
கரூர் மாவட்டம் கட்டளை ரெங்கநாதபுரத்தில் காவிரி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்,
கரூர் மாவட்டம் கட்டளை ரெங்கநாதபுரத்தில் காவிரி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் இருந்து தினசரி தண்ணீர் எடுக்கப்பட்டு ஜகதாபி, பாளையம் ஆகிய இடங்களில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எரியோடு, திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடும் வறட்சி காரணமாக கரூர் காவிரி ஆற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உறை கிணறுகளில குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது. மேலும் அங்கு புதிய உறை கிணறு அமைக்கவும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் குறைந்தளவே தண்ணீர் எடுக்கப்படுவதால் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு காவிரி குடிநீர் முறையாக செல்வதில்லை.
தட்டுப்பாடுஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு வழக்கமாக விருப்பாச்சி தலையூத்து அருவியில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டது. இதுதவிர நகராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் மழை பெய்யாததால் தலையூத்து நீழ்வீழ்ச்சி வறண்டது.
மேலும் ஆழ்துளை கிணறுகளில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது. அந்த தண்ணீரும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது காவிரி குடிநீரும் முறையாக செல்லாததால் நகராட்சி பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நடவடிக்கைஇதைத்தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக வேடசந்தூர் அருகே உள்ள ஒட்டநாகம்பட்டி பிரிவில் நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஏற்கனவே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். ஆனால் இங்கிருந்து சுமார் பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுவதால் தங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.