செஞ்சி அருகே கோர விபத்து கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் உடல் நசுங்கி பலி 28 பேர் படுகாயம்


செஞ்சி அருகே கோர விபத்து கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் உடல் நசுங்கி பலி 28 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Jun 2017 3:50 AM IST (Updated: 10 Jun 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கார்-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

செஞ்சி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சாம்பல்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). இவர் பெங்களூரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நாகராஜ் தனது மகள் கலைச்செல்வி (16) மற்றும் நண்பரான பெங்களூருவை சேர்ந்த முனியப்பன் மகன் சந்திரசேகர்(45) ஆகியோருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். காரை பெங்களூரு அருகே ராமாச்சார் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

நாகராஜ், கலைச்செல்வி, சந்திரசேகர் ஆகிய 3 பேரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அதே காரில் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஊரணித்தாங்கல் காந்திநகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

3 பேர் சாவு

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி நாகராஜ், சந்திரசேகர் மற்றும் கார் டிரைவர் ராமாச்சார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். கலைச்செல்வி படுகாயம் அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அபாண்டைராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கலைச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பஸ்சும் பலத்த சேதமடைந்தது. மேலும் பஸ்சில் வந்த திண்டிவனம் அருகே ஊரணிபட்டினத்தை சேர்ந்த முனியம்மாள்(47), பானுமதி (40) செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன்(77), காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சுமதி(40), மேல்பேரடிகுப்பத்தை சேர்ந்த காசிநாதன்(65), தேவனூரைச்சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை(75), கிருஷ்ணப்பிள்ளை மனைவி தாயம்மாள்(65), மேல்பேரடிக்குப்பம் தர்மசிங்(50), கொணக்கம்பட்டு ரமேஷ் மகள் யுவராணி(12), திண்டிவனம் ஜெயபுரத்தை சேர்ந்த பரமசிவன் மனைவி நிர்மலா(45) உள்பட 27 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விசாரணை

அவர்களையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து விபத்தில் இறந்த நாகராஜ், சந்திரசேகர் மற்றும் ராமாச்சார் ஆகியோரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story