திருப்பூரில் அதிகாலையில் வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை
திருப்பூரில் அதிகாலையில் சம்பவம்: வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்
திருப்பூர்,
திருப்பூரில் அதிகாலையில் வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தையல் தொழிலாளி கொலைதிருப்பூர் நஞ்சப்பா பள்ளி ரோட்டில் இருந்து காதர்பேட்டை செல்லும் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வயிறு, தலை, நெஞ்சு பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நேற்று காலை இதைப்பார்த்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சாக்கடை கால்வாய்க்குள் இருந்து அந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் திருப்பூர் இடுவம்பாளையம் வஞ்சிப்பாளையத்தை சேர்ந்த சிவஞானத்தின் மகன் ஹரீஸ்(வயது 25) என்பதும், பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
நடுரோட்டில் ரத்தக்கறைஇதைத்தொடர்ந்து காதர்பேட்டையில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு முன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராயபுரம் ரோட்டில் இருந்து ஹரீஸ் ரத்த காயத்துடன் ஓடி வந்து காதர்பேட்டை ரவுண்டானா பகுதிக்கு வந்து சாக்கடை கால்வாய் அருகே அமர்ந்து இருந்ததும் சுமார் 20 நிமிடம் உயிருக்கு போராடிய அவர் பின்னர் சாக்கடை கால்வாய்க்குள் சரிந்து விழுந்து இறந்ததும் வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் ராயபுரம் ரோட்டுக்கு சென்று பார்த்தபோது ஹரீஸ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நடுரோட்டில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனால் நள்ளிரவில் வீட்டில் இருந்து ஹரீஸ் ராயபுரம் பகுதிக்கு வந்துள்ளதும், அங்கு மர்ம ஆசாமிகளுடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் ஹரீசை குத்தி விட்டு அந்த ஆசாமிகள் தப்பியதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ‘டால்மி’ வரவழைக்கப்பட்டது. ஹரீஸ் உடல் கிடந்த இடத்தில் இருந்து ஓடி, ராயபுரம் பூங்காவை சுற்றி வந்து மோப்பநாய் நின்றது.
வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணைஇதுகுறித்து தகவல் அறிந்த ஹரீசின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து ஹரீசின் உடலை பார்த்து கதறி அழுதனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு வந்த ஹரீஸ் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 12 மணி வரை அவர் வீட்டில் படுத்திருந்ததை அவருடைய பெற்றோர் பார்த்துள்ளனர்.
அதன்பிறகே ஹரீஸ் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் ராயபுரம் பகுதிக்கு வந்துள்ளார். அவர் யாரை சந்திப்பதற்காக அதிகாலையில் ராயபுரம் வந்தார். அவரை சரமாரியாக குத்தியவர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. மேலும் ஹரீஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.
ராயபுரம் பகுதியில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.