தோக்கம்பட்டி, நார்த்தம்பட்டி ஏரிகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணி


தோக்கம்பட்டி, நார்த்தம்பட்டி ஏரிகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணி
x
தினத்தந்தி 10 Jun 2017 4:05 AM IST (Updated: 10 Jun 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

தோக்கம்பட்டி, நார்த்தம்பட்டி ஏரிகளில் இருந்து விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணியை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகள் தூர்வாரப்படும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி நல்லம்பள்ளி தாலுகா தோக்கம்பட்டி, நார்த்தம்பட்டி ஆகிய ஏரிகளில் இருந்து விவசாய நில மண் வளப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பேசியதாவது:-
விவசாய நிலங்களை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு தேவையான வண்டல்மண் அந்தந்த ஏரிகளில் இருந்து வழங்கப்படுகிறது.

மண்வளம்

மஞ்சள், பருத்தி, வெற்றிலை, துவரை, உளுந்து மற்றும் மாட்டுத்தீவன பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாய நிலங்களில் வண்டல் மண்ணை பயன்படுத்தினால் மகசூல் 2 மடங்காக அதிகரிக்கும். விவசாய நிலங்களின் மண்வளமும் பாதுகாக்கப்படும். வருவாய்த்துறையில் விண்ணப்பித்த உடன் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விண்ணப்பித்தால் வண்டல் மண் கிடைக்க உடனடி ஆணை வழங்கப்படும். எனவே விவசாயிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்தி, அமரவேல் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story