அன்னூரில் வாலிபர் அடித்துக்கொலை


அன்னூரில் வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2017 4:11 AM IST (Updated: 10 Jun 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

அன்னூரில் வாலிபர் அடித்துக்கொலை: குடும்ப பிரச்சினையில் தலையிட்டதால் நண்பரை கொலை செய்தோம் கைதான 2 பேர் வாக்குமூலம்

அன்னூர்,

அன்னூரில் நடந்த வாலிபர் அடித்துக்கொலை சம்பவத்தில் குடும்ப பிரச்சினையில் தலையிட்டதால் நண்பரை கொலை செய்தோம் என்று கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அடித்துக்கொலை

அன்னூர் மேட்டுப்பாளையம் ரோடு ஜீவா நகரில் கடந்த 2–ந்தேதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையை சேர்ந்த சந்தீப் (வயது 33) என்பது தெரியவந்தது. சந்தீப் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப் பட்டது.

2 பேர் கைது

அதில், கேரள மாநிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ரோபின் (24), கோவிந்தாபுரத்தை சேர்ந்த ராஜேஸ் (21) ஆகிய இருவரும் சேர்ந்துதான் சந்தீப்பை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

குடும்ப பிரச்சினையில் தலையீடு

நண்பர்களான சந்தீப், ரோபின், ராஜேஸ் ஆகிய 3 பேரும் கோவை கிட்டாம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளனர். ரோபின் செல்போனுக்கு அவரது வீட்டில் இருந்து அழைப்பு வரும்போது அடிக்கடி சந்தீப் எடுத்து பேசியுள்ளார்.

இதனால் ரோபினுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவர் சந்தீப்பை பலமுறை கண்டித்தும் அவர்கேட்கவில்லை. மேலும் அவர் ரோபினின் குடும்ப பிரச்சினையிலும் தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரோபின் சந்தீப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

கோவை சிறையில் அடைப்பு

அதன்படி கடந்த 1–ம் தேதி இரவு அன்னூரை அடுத்த காக்காபாளையத்தில் உள்ள மதுக்கடையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறியதும், ரோபின், ராஜேஸ் ஆகியோர் சேர்ந்து சந்தீப்பை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.

பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து ஜீவா நகரில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றதாக வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்பு போலீசார் அவர்கள் இருவரையும் மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story