கோவை நகருக்குள் சுற்றித்திரிந்த காட்டு யானை சாவு


கோவை நகருக்குள் சுற்றித்திரிந்த காட்டு யானை சாவு
x
தினத்தந்தி 10 Jun 2017 4:11 AM IST (Updated: 10 Jun 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

கோவை நகருக்குள் சுற்றித்திரிந்த காட்டு யானை சாவு வனப்பகுதியில் இறந்து கிடந்தது

கோவை,

கோவைப்புதூர், தீத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சுற்றித்திரிந்த காட்டு யானை வனப்பகுதியில் இறந்து கிடந்தது. உடல்நலக்குறைவினால் அந்த யானை இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நகருக்குள் புகுந்த காட்டு யானை

கோவை நகருக்குள் கடந்த 2–ந்தேதி அதிகாலை நுழைந்த ஒரு காட்டு யானை 12 வயது சிறுமி உள்பட 4 பேரை மிதித்து கொன்றது. இதைத்தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வனத்தில் விட்டனர்.

இந்தநிலையில் மறுநாளில் மற்றொரு யானை, கோவைப்புதூர், தீத்திப்பாளையம் பகுதியில் சுற்றியது. அப்போது தீத்திப்பாளையம் பகுதியில் கால்நடைகளை மிதித்து கொன்றது. எனவே அந்த யானையால் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.

யானை சாவு

தொடர்ந்து தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்தனர். இந்தநிலையில் மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பகுதியில் உள்ள அய்யாசாமி மலை அருகே மொடமாசி என்ற வனப்பகுதியில் அந்த யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. மதுக்கரை வனச்சரகர் செந்தில்குமார், வனவிலங்கு மருத்துவ நிபுணர் டாக்டர் மனோகரன் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று யானையை பார்வையிட்டனர். இறந்த யானையின் உடல் அந்த பகுதியிலேயே பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

யானை இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, யானை வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டு சரியாக தீவனம் தின்ன முடியாமல் அலைந்து திரிந்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அந்த யானை இறந்துள்ளது என்று தெரிவித்தனர்.

10 யானைகள் சாவு

கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் வறட்சி, உடல்நலக்குறைவு, மின்சார வேலியில் சிக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 10 யானைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story