டாஸ்மாக் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு போராட்ட குழுவினருடன் மது குடிக்க வந்தவர்கள் மோதல்
டாஸ்மாக் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்ட குழுவினருடன் மதுக்குடிக்க வந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கருமத்தம்பட்டி,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கணியூர் கரவழிமாதப்பூர் ரோட்டில் புதிய டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அங்குள்ள தனியார் தோட்டத்தில் கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மதுக்கடை திறக்க கூடாது என்று மனு கொடுத்தனர். கலெக்டர் ஹரிகரனும், மனுவை பெற்று அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
இந்தநிலையில் கடந்த 7–ந்தேதி அங்கு புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
மோதல்; 2 பேர் படுகாயம்மேலும் மதுக்கடை திறக்க இடம் கொடுத்த ராமசாமி என்பவரது வீட்டிற்கு பெண்கள் கையில் துடைப்பத்துடன் சென்று போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மதுக்கடையை திறந்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றனர். ஆனால் அவர்களின் எச்சரிக்கையையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் 2–வது நாளாகவும் மதுக்கடையை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு மதுகுடிக்க வந்த சிலர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மதுகுடிக்க வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு மதுகுடிக்க வந்த பழனிச்சாமி என்பவரை பொதுமக்கள் தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்தது. தலையில் ரத்தம், சொட்ட, சொட்ட வடிந்தது. மேலும் மது குடிக்க வந்தவர்கள் தாக்கியதில் சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சோமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து மதுக்கடையை முறறுகையிட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புஇது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சூலூர் தாசில்தார் பழனிச்சாமி விரைந்து வந்தார். அங்கு அவர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
நாங்கள் அமைதியான முறையில் தான் இந்த போராட்டத்தை தொடங்கினோம். ஆனால் மதுக்கடைக்கு மதுக்குடிக்க வந்தவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து மோதலில் ஈடுபட்டனர். எனவே உடனடியாக இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் இப்போதே நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து தாசில்தார் பழனிச்சாமி, இந்த மதுக்கடையை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.