பொதுஇடத்தில் மது குடித்தவரை கண்டித்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை அருகே ஆதனூரில் பொது இடத்தில் மது குடித்தவரை கண்டித்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது19). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் இரவு அருகில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் வைத்து மது குடித்துகொண்டிருந்தார்.
இதை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய மகன் பாலச்சந்தர் (35) என்பவர் இளையராஜாவிடம் இங்கு மது குடிக்கக்கூடாது என்று கூறி கண்டித்துவிட்டு சென்றுவிட்டார். இதில் ஆத்திரமடைந்த இளையராஜா மது போதையில் பாலச்சந்தரை தாக்க அரிவாளுடன் சென்றுள்ளார்.
அப்போது வெள்ளையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருடைய மகன் சந்துரு(35) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துக்கொண்டிருந்தார். அவரை, பாலச்சந்தர் என்று நினைத்து அரிவாளால் இளையராஜா வெட்டினார். இதில் சந்துரு படுகாயம் அடைந்தார்.
வழக்குப்பதிவு
அதன் பின்னர் அவர், அங்கு நின்றுக்கொண்டிருந்த பாலச்சந்தரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர்.