நிதியியல் கல்வி வார விழாவையொட்டி வங்கி பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு கூட்டம்


நிதியியல் கல்வி வார விழாவையொட்டி வங்கி பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:31 AM IST (Updated: 10 Jun 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

நிதியியல் கல்வி வார விழா–2017 முன்னிட்டு பொது மக்களுக்கு வங்கி பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், நிதியியல் கல்வி வார விழா– 2017யை முன்னிட்டு பொது மக்களுக்கு வங்கி பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:–

ரிசர்வ் வங்கியின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நிதியியல் வார விழா கொண்டாடப்படுகிறது. மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் நடத்தப்படும் நிதியியல் வார விழாவில், பொதுமக்களுக்கு வங்கி பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பணத்தை எவ்வாறு ஈட்டுவது, பாதுகாப்பது, செலவிடுவது, சேமிப்பது, இரட்டிப்பாக்குவது என்பது தான் நிதிசார் கல்வியின் நோக்கமாகும்.

சேமிப்பு

மக்கள் தங்கள் நிதியினை பாதுகாப்பாக எங்கு சேமிப்பது, அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி அறிய வேண்டும். வங்கிகளில் சேமிக்கப்படும் பணமானது, உங்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் நிதிசார்ந்த உதவிகளை செய்ய வழிவகுக்கும். மேலும் வங்கிகளில் சேமிக்கும் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.

உங்கள் அடிப்படை தேவைகளுக்காகவும், இதரதேவைகளுக்காகவும் மேற்கொள்ளப்படும் செலவினம் அனைத்தும் வங்கிகள் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய முன்வர வேண்டும். நீங்கள் நல்வழியில் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதுமட்டுமல்லாது வங்கிகளின் உதவியோடு முதலீடு செய்து இரட்டிப்பாக்குவதற்கு வழி வகைசெய்ய வேண்டும்.

குறைபாடுகள்

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதில் பிரச்சினை, உரிய முன்னறிவிப்பின்றி கட்டணங்கள் வசூலிக்கப்படுதல், கடன்அட்டை தொடர்பான பிரச்சினைகள் போன்ற அன்றாட வங்கி சேவைகளில் உங்களுக்கு ஏற்படும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வங்கி அதிகாரிகளிடம் அல்லது வங்கிக்குறை தீர்ப்பாளரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ராம்குமார், முன்னோடி வங்கி மேலாளர் சக்திவேல், அரசு அலுவலர்கள் உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story