உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா?


உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 10 Jun 2017 4:42 AM IST (Updated: 10 Jun 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என 172 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அரிசி குடோன் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதாவிற்கு புகார்கள் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரிசி குடோன்களிலும், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை அரிசி கடைகளிலும் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். மேலும், அரிசி வகைகள் சிலவற்றை மாதிரி எடுத்து பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

கலப்பட டீத்தூள் பறிமுதல்

இந்தநிலையில், சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு 17½ கிலோ கலப்பட டீத்தூள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து சேலம் பழைய பஸ்நிலையம், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர் வைத்து உணவு பரிமாறப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று மாலை உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்துவது குற்றம் என்றும், அதையும் மீறி பயன்படுத்தினால் சாலையோர தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதேபோல ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, மகுடஞ்சாவடி உள்பட மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் முழுவதும் 172 கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில் 17½ கிலோ கலப்பட டீத்தூள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். அதை விற்பனை செய்ய வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். உணவு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பயன்படுத்துவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story