அரசு, பொதுத்துறை ஊழியர்கள் சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்


அரசு, பொதுத்துறை ஊழியர்கள் சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:50 AM IST (Updated: 10 Jun 2017 4:50 AM IST)
t-max-icont-min-icon

அரசு, பொதுத்துறை ஊழியர்கள் சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் மண்டல அலுவலர் மணீஸ்வரராஜா தகவல்

மதுரை,

அரசு, பொதுத்துறை ஊழியர்கள் தங்களது சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை மையங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு மற்றும் பொதுத்துறையில் வேலைபார்க்கும் ஊழியர்கள் விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் போது, அங்கேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் நலனுக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவரவர் சொந்த ஊரிலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதியளித்துள்ளது. அதன்படி, விடுமுறை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் அரசு, பொதுத்துறை ஊழியர்கள் அங்குள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கலாம். மேலும், சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் கட்டணம்

அதேபோல, பாஸ்போர்ட் சேவை மையங்களில் மூத்த குடிமக்கள்(வயதானவர்கள்), குழந்தைகள் ஆகியோர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தை சேவை மையங்களில் செலுத்தி வந்தனர். ஆனால், வருகிற 12–ந் தேதி முதல் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், முன்தேதி பெறாமல் தங்களது விண்ணப்பத்தை சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த நடைமுறை போலீஸ் தடையில்லா சான்றிதழ் மட்டும் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும். இ.சி.என்.ஆர். கேட்டு விண்ணப்பிப்பவர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

பாஸ்போர்ட் முடக்கம்

இடைத்தரகர்கள் மூலம் போலியாக வருமானத்தை உயர்த்திக்காட்டி, வருமானவரி கட்டியதற்கான ரசீதுடன் இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் முடக்கப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் புகார் மனு ரசீதை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின்னர் இ.சி.ஆர். பாஸ்போர்ட்டாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story