மதுரையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை


மதுரையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
x

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

மதுரை,

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தமிழகத்திலும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார். அதன்படி, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் லட்சுமிநாராயணன் ஆலோசனையின் பேரில் அனுப்பானடி, சிந்தாமணி, பனையூர், கீழவாசல், கே.கே.நகர், காமராஜர் சாலை, சிம்மக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சரணவன் கூறுகையில், மதுரையில் உள்ள அரிசி ஆலைகள், அரிசி குடோன்கள், மொத்த விற்பனை நிலையங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் அரிசியினால் ஏற்படும் தீமைகள் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அனைத்து வியாபாரிகளும், அரிசி ஆலை உரிமையாளர்களும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Next Story