அரசு உத்தரவை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பாதிப்பு


அரசு உத்தரவை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 5:45 AM IST (Updated: 10 Jun 2017 5:45 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அரசு உத்தரவை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

புதுச்சேரி, 

புதுச்சேரி சுற்றுலா நகரமாக விளங்குவதால் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்து வருகிறது.

சுமார் 13½ லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் சுமார் 12 லட்சம் வாகனங்கள் இருப்பதாகவும், ஆனால் அந்த அளவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படவில்லை என்றும் அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் தினமும் காலை, மாலையில் ‘பீக் அவர்’ என்று அழைக்கப்படும் முக்கியமான நேரங்களில் புதுச்சேரி நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை விவரிக்க முடியாது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நடவடிக்கை தான் இல்லை.

அரசு உத்தரவு உதாசீனம்

இது ஒருபுறம் என்றால் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைத்து திக்கு முக்காடச் செய்து விடுகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர் களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய பிளக்ஸ் போர்டுகளை வைத்து விடுகின்றனர்.

இந்த பிரச்சினை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது புதுச்சேரியில் எந்த இடத்திலும் பேனர் வைக்க கூடாது என்று முதல்- அமைச்சர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் தொடர்ந்து பேனர்கள் வைக்கப்படுவதன் மூலம் இந்த உத்தரவு உதாசீனப்படுத்தப்படுகிறது.

நகராட்சி விதிமுறைகள்

இதில் வீட்டு விசேஷங்களுக்கான விளம்பர பேனர் களும் சேர்ந்து கொள்வதால் அவற்றில் உள்ள மணமக்களின் படம் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் காற்றில் சாய்ந்து விழுந்து விடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே நகரில் இதுபோல் வைக்கப்படும் பேனர்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விளம்பர பலகைகளை வைப்பதற்கு என்று கொம்யூன் மற்றும் நகராட்சிகளில் விதிமுறைகள் உள்ளன. அதன்படி உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விளம்பர பலகைகளை வைக்க வேண்டும். இதை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story