நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 10 Jun 2017 6:06 AM IST (Updated: 10 Jun 2017 6:06 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுலகம் எதிரில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார்.

அரசு பணியாளர் சங்க துணைத்தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பழனிபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தனித்துறை ஏற்படுத்த வேண்டும்

விலைகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள பொதுவினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், மின்னணு தராசு, வங்கிகள் மூலம் ஊதியம், வருங்கால வைப்புநிதி குறித்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி தொகையினையும், நிர்வாகத்தின் பங்கினையும் உரிய கணக்கில் செலுத்தி ஆண்டுக்கு ஒருமுறை எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பணியாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைந்து அனைவருக்கும் சீரான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பொதுவினியோக திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

Next Story