ஆலங்குளம் அருகே குளத்தில் அமைக்கப்பட்ட காற்றாலையை அகற்றக்கோரி போராடும் கிராம மக்கள் பூங்கோதை எம்.எல்.ஏ. சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
ஆலங்குளம் அருகே குளத்தில் அமைக்கப்பட்ட காற்றாலையை அகற்றக்கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே குளத்தில் அமைக்கப்பட்ட காற்றாலையை அகற்றக்கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேற்று பூங்கோதை எம்.எல்.ஏ. சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
போராட்டம்நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நாரணாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு சொந்தமான காற்றாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி 100–க்கும் மேற்பட்டோர் குளத்தில் பந்தல் அமைத்து கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று போராட்டக்காரர்களை பூங்கோதை எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், இந்த பெரியகுளத்தில் அமைக்கப்பட்ட காற்றாலையானது தேர்தலுக்கு முன்னர் அ.தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டது. தற்போது நான் பதவி ஏற்று வருவதற்குள் காற்றாலையின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. வேலை முடிந்த பின்னரே எனக்கு தெரியவந்தது. ஆகையால் மக்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, காற்றாலை இயங்காதவாறு அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் கடந்த வாரம் காற்றாலை தரப்பில் நாங்கள் அனுமதி வாங்கி விட்டோம் என்று அதனை இயக்கியுள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
உண்ணாவிரதம் மேற்கொள்வோம்இதுகுறித்து தாசில்தார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி காற்றாலை அமைந்துள்ள இடம் நீர்பிடிப்பு பகுதியில் தான் அமைந்துள்ளது என்று அவர்களே அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தாமலேயே இயக்கியுள்ளார்கள். எனவே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த காற்றாலையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக்கூறி தகுந்த நடவடிக்கை எடுப்பேன். அதற்கு மேலும் நடவடிக்கை இல்லையென்றால் உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்றார்.
இந்த போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஒன்றிய அவை தலைவர் தங்கபாண்டியன், நாரணாபுரம் துணை கிளை செயலாளர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.