‘மிரட்டல் பற்றி கவலைப்பட மாட்டேன்’: எனது அரசியல் பயணம் வழக்கம்போல் தொடரும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘மிரட்டல் பற்றி கவலைப்பட மாட்டேன்‘. எனது அரசியல் பயணம் வழக்கம்போல் தொடரும் என்று நெல்லையில், தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நெல்லை,
‘மிரட்டல் பற்றி கவலைப்பட மாட்டேன்‘. எனது அரசியல் பயணம் வழக்கம்போல் தொடரும் என்று நெல்லையில், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜனதா யாத்திரைபா.ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் தாமிரபரணி நதியை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த 8–ந் தேதி பாபநாசத்தில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கப்பட்டது. தாமிரபரணி கரையோர பகுதிகள் வழியாக இந்த யாத்திரை சுற்றி நேற்று மாலை நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் யாத்திரை முடிவடைந்தது.
இதையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லைக்கு வந்து தாமரை யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பெண்களுடன் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் மங்கள ஆரத்தி எடுத்து, மலர் தூவி தாமிரபரணி ஆற்றுக்கு வழிபாடு செய்தார்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நதிகள் பாதுகாப்புபிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதையொட்டி கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தார். நாடு முழுவதும் உள்ள நதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதே பா.ஜனதா கட்சியின் குறிக்கோள் ஆகும். இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள நதிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பா.ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியியாக பா.ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் தாமிரபரணி நதியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு யாத்திரை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த யாத்திரை குழுவினர், தமிழக முதல்–அமைச்சரை சந்தித்து தாமிரபரணி நதியை பாதுகாக்கும் கோரிக்கையை வைக்க உள்ளனர்.
நதிகளை தூர்வார வேண்டும்தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் தூர்வார வேண்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகள், குளங்கள் தூர்வாரப்படும் என்று அறிவிப்பு செய்து உள்ளார். ஆனால் எந்த பணியும் வேகமாக நடக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, கிடப்பில் உள்ள நதிநீர் மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
மாநில நதிகளை தூர்வார மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது. கூவத்தை சுத்தப்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. ஆனால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது ஆட்சியில் கூவத்தை சுத்தம் செய்யவில்லை. இதே போல் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இனிமேலாவது தமிழக அரசு, மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தி ஆறுகளை தூர்வார வேண்டும். மேலும் தென்னக நதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிட கட்சிகள்தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அரசியல் லாபத்துக்காக குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்கிறார். தி.மு.க. சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. இனிமேலாவது தி.மு.க. சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் கட்சியாக இல்லாமல் வழிநடத்தும் கட்சியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தை நெடுங்காலமாக ஆண்ட திராவிட கட்சிகள் நீர்நிலைகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாய் போன்ற தாமிரபரணி தனது மண் மடியை இழந்து நிற்கிறது. தாமிரபரணி மற்றும் வைகை ஆறுகள் பொய்த்து போனதற்கு மணல் கொள்ளையே காரணம் ஆகும்.
மணல்குவாரிகள்தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் செயற்கை மணல் கொடுப்பதாக கூறிவிட்டு தற்போது 70 மணல் குவாரிகள் திறக்கப்போவதாக கூறிஉள்ளது. தமிழக ஆறுகளில் மணல் சுரண்டப்பட்டால் எதிர்காலத்தில் ஆறும் இருக்காது, குடிக்க தண்ணீரும் கிடைக்காது. ரூ.1,000–க்கு விற்பனை செய்ய வேண்டிய ஒரு யூனிட் மணல் தற்போது ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வீடு இல்லாத அனைவரும் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஆனால் தமிழகத்தில் மணல் விலையை பார்த்தால் சாமானியர்களால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மிரட்டல்நான் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால் எனக்கு மிரட்டல் வரலாம் என்று கருதுகிறேன். அதுபற்றி நான் கவலைப்பட வில்லை. எனது தீவிர அரசியல் பயணம் வழக்கம்போல் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.