தாறுமாறாக ஓடிய கார் பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி பேராசிரியை உள்பட 3 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே தாறுமாறாக ஓடிய கார் பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்து: பேராசிரியை உள்பட 3 பேர் பலி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே தாறுமாறாக ஓடிய கார், பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னை லயோலா கல்லூரி பேராசிரியை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கல்லூரி பேராசிரியைசென்னை நந்தீவரம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ஜோஸ்பின் ஜேம்ஸ்மேரி(வயது 40). கன்னியாஸ்திரியான இவர் சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் வேலைபார்க்கும் பேராசிரியரான சென்னை திருநிலையை சேர்ந்த ராஜாராவ் மகன் பாரி(40), அரக்கோணம் தக்குளத்தை சேர்ந்தவரும், சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான வரதன் மகன் வேதகிரி(54) ஆகியோருடன் திருச்சியில் உள்ள பாதிரியாரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு காரில் நேற்று அதிகாலையில் புறப்பட்டார்.
காரை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சேத்பட்டை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஸ்டீபன்ராஜ்(34) என்பவர் ஓட்டினார்.
தடுப்பு கட்டையில் மோதிய கார்அந்த கார் நேற்று காலை 7 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பாலத்தின் தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
3 பேர் பலிஇந்த விபத்தில் காரில் இருந்த பாரி, ஜோஸ்பின் ஜேம்ஸ்மேரி ஆகியோர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்டீபன்ராஜ், வேதகிரி ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஸ்டீபன்ராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து வேதகிரி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த ஸ்டீபன்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிணஅறையில் வைக்கப்பட்டது.
போலீசார் விசாரணைஇதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து பற்றி விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியான பாரி, ஜோஸ்பின் ஜேம்ஸ்மேரி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இருப்பினும் இந்த விபத்தால் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.