சாத்தான்குளத்தில் மாணவர்கள் நாமம் அணிவதற்கு எதிர்ப்பு: பள்ளிக்கூடத்தை பொதுமக்கள் முற்றுகை– சாலைமறியல்
சாத்தான்குளம் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் நாமம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் நாமம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்– முதலூர் ரோட்டில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த இறைவணக்கத்தில், தலைமை ஆசிரியர் ஒலிப்பெருக்கியில் பேசினார். அப்போது அவர் மாணவ– மாணவிகள் பட்டை நாமம் அணிந்து வரக்கூடாது. கைகளில் கயிறு கட்ட கூடாது. கோவில் நேர்த்திக்கடனுக்காக காவி நிற உடை அணிந்தும், வேடம் அணிந்தும் வரக்கூடாது என்று அறிவித்தார்.
நகரின் நடுவில் அமைந்துள்ள இந்த பள்ளிக்கூடத்தில், ஒலிப்பெருக்கியில் அறிவித்ததை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவ– மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பள்ளிக்கூடத்தின் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்புஉடனே சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தலைமை ஆசிரியர் ஒலிப்பெருக்கியில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் மாணவ– மாணவிகள் வழக்கம்போல் நாமம் அணிந்தும், கைகளில் கயிறு கட்டியும், கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காவி நிற உடை அணிந்தும், வேடம் அணிந்தும் வரலாம் என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் கூறியவாறே ஒலிப்பெருக்கியில் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கோரியும், மாணவ– மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு வரலாம் என்றும் பேசினார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.