கடலூரில் கைவரிசைகாட்டி வந்த 3 கொள்ளையர்கள் கைது


கடலூரில் கைவரிசைகாட்டி வந்த 3 கொள்ளையர்கள் கைது
x
தினத்தந்தி 11 Jun 2017 3:15 AM IST (Updated: 11 Jun 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கைவரிசைகாட்டி வந்த 3 கொள்ளையர்கள் கைது ரூ.2½ லட்சம் நகை பறிமுதல்

நெல்லிக்குப்பம்,

கடலூரில் கைவரிசை காட்ட வந்த 3 கொள்ளையர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சையது உசேன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி, போலீசார் விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

போலீசில் சிக்கினார்

இதனால் அந்த வாலிபர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர், புதுச்சேரி மாநிலம் கும்தாமேடு பகுதியை சேர்ந்த பிரபா என்கிற பிரபாகரன் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடலூரில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் விசாரணையில் வெளியானது.

இதையடுத்து பிரபாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவருக்கு உடந்தையாக 2 வாலிபர்கள் இருப்பதும், அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் பிரபாவை சந்தித்து பேசுவதற்காக மருதாடுக்கு அழைத்து இருக்கிறார்கள். அதன்பேரில் அவர் அங்கு வந்த போது, போலீசில் சிக்கிக்கொண்டார்.

3 பேர் கைது

பிரபா கூறியதன் படி, மருதாட்டில் உள்ள ஒரு வாய்க்கால் தரைப்பாலம் அருகே பதுங்கியிருந்த புதுச்சேரி கீழ்பரிக்கல்பட்டு பகுதியை சேர்ந்த விசு என்கிற விசுவநாதன் (25), புதுச்சேரி கும்தாமேடு பகுதியை சேர்ந்த ராஜசேகர் (22) ஆகிய இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

இவர்கள் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டுவதற்காக மருதாடுக்கு வந்து உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் போலீசில் சிக்கி கொண்டனர். தொடர்ந்து பிரபா, விசுவநாதன், ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடலூர் பகுதியில் உள்ள 6 வீடுகளில் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 9 பவுன் நகை, ¾ கிலோ வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story