கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க கோரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க கோரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி ஆற்றுக்குள் இறங்கி நேற்று கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மணல் கொள்ளைகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு, செம்மேடு, ஏரிப்பாளையம், தாழம்பட்டு, சிறுவத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை ஒட்டியபடி கெடிலம் ஆறு ஓடுகிறது. ஆற்றுப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. ஆற்றுக்குள் லாரிகள் சென்று வரும் வகையில், செம்மண் கொட்டி சாலை அமைத்து, இங்கிருந்து மணலை அள்ளி சென்று வருகிறார்கள்.
தொடர்ந்து நடந்து வரும், மணல் கொள்ளையால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கட்ட போராட்டங்கள்இதனால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையிலும், அதிகாரிகள் யாரும் மணல் கொள்ளையை தடுக்க முன்வரவில்லை.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கெடிலம் ஆற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
அவரது நடவடிக்கையை தொடர்ந்து காடாம்புலியூர் போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கூறி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வந்தது.
ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்இந்த நிலையில், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 10–ந்தேதி(அதாவது நேற்று) எலந்தப்பட்டு கெடிலம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் முத்துரசன் தலைமையில் ஒன்று திரண்டனர். இவர்களுடன் எலந்தம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இவர்கள் பேரணியாக எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றுக்குள் இறங்கி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில நிர்வாகக் குழு மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர் குலோப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாக குழு துரை, மதியழகன், குணசேகரன், மோகன், சிவக்குமார், நகர செயலாளர் முருகன் உள்பட 200–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், கடந்த ஒரு ஆண்டாக கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
மேலும் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும், அதிகாரிகள் இதுவரையில் செயல்படுத்தவில்லை. மணல் மணல் கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்ததாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் பேசினார்.
போலீஸ் குவிப்புதொடர்ந்து மதியம் 1 மணிக்கு போராட்டம் முடிந்தவுடன், அவர்களாகவே கலைந்து சென்றனர். முன்னதாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.