சாலை அமைக்கும் பணி நடந்த போது மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி
சாலை அமைக்கும் பணி நடந்த போது மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்
குன்னூர்
குன்னூர் தேயிலை தோட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடந்தபோது மண் சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
சாலை அமைக்கும் பணிகுன்னூரில் ஆடர்லி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதி வனத்துறைக்கு சொந்தமானதாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் சாலை அமைக்காமல், மற்றொரு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நேற்று காலை சாலை அமைக்கும் பணியில் சுமார் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால், நிலத்தின் ஈரத்தன்மை அதிகரித்து காணப்பட்டது. அப்போது சாலை பணிக்கு இடையூறாக சுமார் 11 அடி உயரத்தில் இருந்த பாறையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
மண்சரிவில் சிக்கினர்மழைகாரணமாக நிலம் ஈரத்தன்மையுடன் இருந்ததால் திடீரென்று 11 அடி உயரத்திலிருந்து மண் மற்றும் பாறை சரிந்து விழுந்தது. அப்போது நிலமட்டத்தில் நின்று வேலை செய்து கொண்டிருந்த குன்னு£ர் அருகே ஓட்டுப்பட்டரையைச்சேர்ந்த பிரான்கிளின் என்பவரின் மகன் ரவிக்குமார் என்கிற தமிழ்வேந்தன் (வயது 34) மற்றும் குன்னூர் அருகே உள்ள சொலாட மட்டத்தை செர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் சிவக்குமார் (16) ஆகியோர் அந்த பாறை மற்றும் மண்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் உடனே இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிணமாக மீட்டனர்இதற்கிடையில் குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பாறை மற்றும் மண் சரிவில் சிக்கி, காலில் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடிய சிவக்குமாரை மீட்டனர். ஆனால் தமிழ் வேந்தனின் உடல் முழுவதும் பாறை மற்றும் மண் கலந்த இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அவரை பிணமாக மீட்டனர்.
சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்இதனை தொடர்ந்து படுகாயமடைந்த சிவக்குமாரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்வேந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணில் புதைந்து பலியான தமிழ் வேந்தன் குன்னூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஆவார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இறந்தவர் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.