கொடுங்கையூரில் ரசாயன கம்பெனியில் தீ விபத்து


கொடுங்கையூரில் ரசாயன கம்பெனியில் தீ விபத்து
x
தினத்தந்தி 11 Jun 2017 3:45 AM IST (Updated: 11 Jun 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில் ரசாயன கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன மூலப்பொருட்கள் இருந்த பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்கள் வெடித்து சிதறியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

பெரம்பூர்,

திருவொற்றியூர் சாத்துமா நகர் உதயசூரியன் 2–வது தெருவைச் சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மகன் உதயகுமார். இவர்கள் இருவரும் சேர்ந்து கொடுங்கையூரில் தண்டையார்பேட்டை நெடுஞ் சாலையில் ரசாயன கம்பெனி நடத்தி வருகின்றனர். 

இங்கு கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திராவகம், பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 10–க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

தீ விபத்து

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கம்பெனியை பூட்டி விட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென ரசாயன கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பேரல்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். வியாசர்பாடி, பெரம்பூர், எழில்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

3 பேர் காயம்

கம்பெனியில் இருந்த ரசாயன பொருட்கள், பேரல்கள், கேன்கள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து நாசமானது. தீயின் வெப்பத்தால் ரசாயன மூலப்பொருட்கள் இருந்த பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்கள் வெடித்து சிதறின. 

இதில் பக்கத்தில் உள்ள கடையில் படுத்து இருந்த லாரி டிரைவர்களான ஜெகதீசன் (29), நாகராஜன் (52), ஸ்ரீதர் (23) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story