மரங்கள், மின்கம்பங்களை அகற்றாததால் உடுமலை ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி பாதியில் நிற்கிறது


மரங்கள், மின்கம்பங்களை அகற்றாததால் உடுமலை ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி பாதியில் நிற்கிறது
x
தினத்தந்தி 11 Jun 2017 3:15 AM IST (Updated: 11 Jun 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

மரங்கள், மின்கம்பங்களை அகற்றாததால் உடுமலை ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி பாதியில் நிற்கிறது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி–உடுமலை சாலை பழனி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், திருச்சி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். உடுமலை சாலை குறுகலான சாலை என்பதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இந்த சாலை பொள்ளாச்சி– உடுமலை ரோடு தேர்நிலை சந்திப்பில் இருந்து ஊஞ்சவேலாம்பட்டி தாராபுரம் ரோடு சந்திப்பு வரை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக ரூ.24 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தற்போது உள்ள 10 மீட்டர் குறுகலான சாலையை, 30 மீட்டருக்கு அகலப்படுத்தப்பட உள்ளது. நடுவில் தடுப்புச்சுவருடன் கூடிய சாலை அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணி தாமதம் ஆவதால் 4 வழிச்சாலைபணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

விபத்து ஏற்படும் அபாயம்

ஆனாலும் மரங்கள், மின் கம்பங்கள் இருக்கும் பகுதியை விட்டு, விட்டு மற்ற இடங்களில் சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடுமலை ரோடு வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாகும். குழி தோண்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் பொதுமக்களும் சாலையோரத்தில் நடந்து செல்ல முடியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குழி இருப்பதே தெரிய வில்லை. சின்னாம்பாளையம் பகுதியில் மதுக்கடை இருப்பதால் மது குடித்து வருபவர்கள் குழியில் தவறி விழுந்து விடுகின்றனர். பணிகள் தொடங்கும் முன்பே மரங்கள், மின் கம்பங்களை அகற்றி இருக்க வேண்டும். பணிகளை தொடங்கி விட்டு தற்போது பாதியில் நிறுத்தி விட்டனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்ட மதிப்பீடு

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

4 வழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதி வரை மட்டும் சுமார் 400 மரங்கள் உள்ளன. இதில் 270 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 130 மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளின் போது மின்சார கம்பங்கள், பி.எஸ்.என்.எல். கேபிள் ஒயர்கள் மாற்று இடத்தில் அமைக்கப்பட உள்ளது.

மின்கம்பங்களை மாற்றி நடுவதற்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பது குறித்த திட்ட மதிப்பீடு தயாரித்து மின்சார வாரிய அதிகாரிகள் அறிக்கை கொடுத்து உள்ளனர். அந்த அறிக்கை ஜதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகளும், மரங்கள் அகற்றும் பணிகளும் முடிந்து பிறகு மீண்டும் பணிகள் தொடங்கும்.

தற்போது வனத்துறை மூலம் மரங்களின் தடிமன், நீளம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. வனத்துறையினர் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தால் மரங்களை வெட்டும் பணிகள் தொடங்கும். பொள்ளாச்சி–உடுமலை நான்கு வழிச்சாலை பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14–ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சப்–கலெக்டர் ஆய்வு

இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், உடுமலை ரோட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. அந்த சாலையில் உள்ள 130 மரங்களை வேரோடு பிடுங்கி நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. 30 மரங்களை ஜோதி நகரில் உள்ள பூங்காவில் நடுவற்கு குறித்து சப்–கலெக்டர், தாசில்தார் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள். ஒரு சில தன்னார்வலர்களும் மரங்களை கேட்டு உள்ளனர் என்றனர்.

மரங்களை காப்பாற்றுவது எப்படி?

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

சாலை விரிவாக்க பணிகளின் போது பால் வகை மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட்டால் நன்கு வளரும். கோவை ரோட்டில் 4 வழிச்சாலை பணிகள் தொடங்கும் போது 20 முதல் 30 மரங்கள் வரை மட்டும் மாற்று இடத்தில் நடப்பட்டது. மீதமுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. ஒரு மரத்தை வேறு இடத்தில் வைப்பதற்கு முன்பாக சுற்றி குழி தோண்டி சல்லி வேர்களை வெட்டி 21 நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும். அது கொழுந்து விடும் நேரத்தில் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டால் நன்றாக வளரும். இப்படி செய்வதன் மூலம் மரங்களை காப்பாற்ற முடியும். மரங்கள் வெட்டப்படுவதால் மழை பெய்வது குறைந்து வருகிறது. கோவை ரோட்டில் மரங்களை நடுவதில் அலட்சியம் காட்டியது போல் இல்லாமல் அதிகாரிகள் உடுமலை ரோட்டில் மரங்களை பாதுகாக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story