வண்டல் மண் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் 9 தாலுகா அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்
வண்டல் மண் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் 9 தாலுகா அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர்,
வண்டல் மண் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்களில் நாளை(திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
வண்டல் மண்திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகள், ஏரி, குளம் மற்றும் நீர்தேக்கங்களிலிருந்து விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் தூர்வாரப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:–
மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப்புறம்போக்கு ஏரி, குளம் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து விவசாயம், வீட்டு பொது உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய உபயோகங்களுக்காக வண்டல், சவுடு மண் மற்றும் கிராவல் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்தில் அமைந்துள்ள 144 நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயன்படுத்தி உற்பத்தி திறன் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளை சிறப்பு முகாம்தமிழக அரசின் அறிவுரையின்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அதிகமான விவசாயிகள் பயன் பெறும் வகையில் செயல்படவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் அதிக அளவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வண்டல் மண் எடுத்து செல்ல அனுமதி வழங்குவது தொடர்பான சிறப்பு முகாம்கள் நாளை(திங்கட்கிழமை) மாவட்டத்திலுள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பாக பட்டா விவரங்களுடன் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு இலவசமாக மண் எடுப்பதற்கு எளிதில் அனுமதி பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்–கலெக்டர்கள் ஷ்ரவன்குமார்(திருப்பூர்), கிரேஸ்பச்சாவு(தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெங்கடாசலம், அனைத்து தாசில்தார்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.