சொத்து தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு தந்தை–மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
பாபநாசம் அருகே சொத்து தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக தந்தை–மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சோத்தமங்கலம் கிராமம் குடியானத்தெரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது55). விவசாயி. இவருடைய மனைவி இந்திராணி(50). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்திராணி குடும்பத்துக்கும், அவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் குடும்பத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இந்திராணி தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோவிந்தராஜ், அவருடைய மகன் சாமிநாதன், இந்திராணியின் அக்காள் கணவர் பூண்டிசாமிநாதன் ஆகிய 3 பேரும் இந்திராணியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சுஇதுகுறித்து இந்திராணியின் கணவர் கலியமூர்த்தி பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜ், சாமிநாதன், பூண்டி சாமிநாதன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.