குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் போலீசாரின் பங்கு முக்கியமானது
குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் போலீசாரின் பங்கு முக்கியமானது என்று கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தெரிவித்தார்.
பெங்களூரு,
குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் போலீசாரின் பங்கு முக்கியமானது என்று கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தெரிவித்தார்.
கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகர்நாடக போலீஸ் துறை சார்பில் குற்றநீதி நடைமுறையை பலப்படுத்துவது தொடர்பான 2 நாள் கருத்தரங்கு பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தொடங்கிவைத்து பேசியதாவது:–
போலீசாரின் பங்கு முக்கியமானதுகுற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. முறையாக விசாரணை நடத்தி சரியான சாட்சியங்களை சேகரித்து போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும். சரியான சாட்சியங்களை கொடுக்க தவறினால் கோர்ட்டுகள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாது. அத்துடன், குற்றவாளிகளை நிரபராதிகள் என கூறும்நிலை ஏற்படும்.
‘போபால் விஷவாயு‘ வழக்கை போலீசார் சரியாக கையாளவில்லை. இதனால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க சாத்தியமானது. இந்த சம்பவத்தில் ஏராளமான மக்கள் மரணமடைந்தனர். ஆனால், குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது என்று ஊடகங்கள் நீதித்துறையை விமர்சனம் செய்தன. கோர்ட்டுகள் விலைப்போய் விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. போலீஸ் துறையின் மோசமான செயல்பாட்டால் நீதித்துறை விமர்சனத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
சாட்சிகள் விலைபோனால்...குற்ற வழக்குகளில் விசாரணை தாமதம் ஆகும்போது சாட்சிகள் அழிந்துபோவதுடன், சாட்சி கூறும் ஆர்வத்தில் இருந்து பொதுமக்கள் விலகி விடுகிறார்கள். சாட்சிகள் விலைபோனாலும் கூட குற்றவாளிகள் தப்பித்து போகிறார்கள். சில வழக்குகளில் தடய அறிவியல் சோதனை அறிக்கை வருவதற்கு ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆகிறது. இதற்கிடையே, விசாரணை அதிகாரி ஓய்வு பெற்று விடுகிறார்கள். இதனால் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
நம்முடைய குற்றநீதி நடைமுறையிலும் சில சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். சில விதிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றால் அரசு வக்கீல் பங்கும் முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கருத்தரங்கை தொடங்கி வைக்க வந்த கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜிக்கு மலர்கொத்து கொடுத்து போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா வரவேற்றார். இந்த கருத்தரங்கில் மாநில உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுபாஷ் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.