அம்மாபேட்டை அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் ஆற்றில் இறங்கி தவிப்பு


அம்மாபேட்டை அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் ஆற்றில் இறங்கி தவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2017 3:00 AM IST (Updated: 11 Jun 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் ஆற்றில் இறங்கி தவிப்பு

அம்மாபேட்டை

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பாலமலை உள்ளது. இங்கு மான், காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகள் அடிக்கடி தண்ணீர் குடிக்க மலையில் இருந்து கீழே இறங்கி அருகே உள்ள ஊர்களுக்குள் புகுவது வழக்கம். அதேபோல் நேற்று காலை 8.30 மணி அளவில் மலையில் இருந்து ஒரு புள்ளிமான் இறங்கி சின்னப்பள்ளம் என்ற ஊருக்குள் புகுந்தது. அப்போது அந்த புள்ளிமான் அங்குள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த புள்ளிமான் ஆற்றில் தவறி விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த மான் சுதாரித்து எழுந்து ஆற்றில் நீந்தியபடி அக்கரையில் உள்ள சேலம் மாவட்டம் கூடக்கல் பகுதிக்கு சென்றது. அப்போது கரையோரம் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து மான் பயந்து மீண்டும் சின்னப்பள்ளத்துக்கு நீந்தி வந்தது. சின்னப்பள்ளம் கரையில் உள்ள பொதுமக்களை பார்த்து பயந்து மீண்டும் அக்கரைக்கு நீந்தியபடி சென்றது. இவ்வாறு மான் பொதுமக்களை பார்த்து ஆற்றில் அங்கும் இங்குமாக நீந்தியபடி தவித்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காலை 10.30 மணி அளவில் அந்த மான் தானாகவே ஆற்றை விட்டு சின்னப்பள்ளத்துக்கு வந்தது. அப்போது மானை பார்த்த தெருநாய்கள் குரைத்தன. இதனால் மான் பயந்து அங்கிருந்து ஓடியது. நாய்களும் விடாமல் மானை துரத்தின. அந்த மானை நாய்கள் கடித்து கொன்றதா? அல்லது மான் தப்பித்து மலைக்கு சென்றுவிட்டதா? என்பது தெரியவில்லை.


Next Story