தேவகோட்டை வட்டார கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு, அதிகாரிகள் அலட்சியம்


தேவகோட்டை வட்டார கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு, அதிகாரிகள் அலட்சியம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:30 AM IST (Updated: 11 Jun 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை வட்டார கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிதி வழங்கியும் அதிகாரிகள் அலட்சியம்

தேவகோட்டை,

தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. அரசு சார்பில் நிதி வழங்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் வினியோகம்

தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி, அந்தந்த ஊராட்சி மன்றங்கள் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோல் தேவகோட்டை பகுதியிலும் மழையில்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 3 அல்லது 4 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது தேவகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தட்டுப்பாடு

தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லாததால் பல கிராமங்களில் குடிநீர் பராமரிப்பு மற்றும் வினியோகம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு குடிநீர் சீராக வழங்க நிதிகளை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தகவல் கொடுப்பது கிடையாது. இதனால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

சீராக வழங்க கோரிக்கை

தேவகோட்டை வட்டாரத்தை பொறுத்தவரையில் புளியால், கிளியூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் கேட்டால், மோட்டார் பழுதானதாக தகவல் தெரிவிக்கின்றனர். மோட்டாரை சரிசெய்ய கோரிக்கை விடுத்தால் சரியான பதில் கூறாமல் உள்ளனர். எனவே தேவகோட்டை வட்டார கிராமங்களில் குடிநீர் சீராக கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி கூறுகையில், நான் பொறுப்பேற்று 2 நாட்களே ஆகிறது. குடிநீர் பிரச்சினை குறித்து எந்த கோரிக்கைகளும் எனது கவனத்திற்கு இன்னும் வரவில்லை. கோரிக்கைகள் வரும்பட்சத்தில் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story