நிலத்தடி நீரை மேம்படுத்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்


நிலத்தடி நீரை மேம்படுத்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீரை மேம்படுத்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணாய்பிறந்தான் ஊராட்சி கிரிவலப்பாதையில் அமைந்துள்ள சோனாநதிகுளம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் தூர்வாரி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை நேற்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுடன் இணைந்து குளத்தை தூர் வாரினார். கலெக்டருடன் இணைந்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தியும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.

சுமார் 2 மணி நேரம் மண்வெட்டுதல், மண்ணை அள்ளி கொடுத்தல் போன்ற பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆகியோர் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

முழு ஒத்துழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். வடஇந்தியாவை சேர்ந்த மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ‘தண்ணீர், தண்ணீர்’ என்ற இயக்கத்தை தொடங்கி கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து சனிக்கிழமை தோறும் 2 மணி நேரம் நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளில் தொழிலாளர்களுடன் தன்னையும் ஈடுபடுத்தி வருகிறார்.

வடஇந்தியாவில் பிறந்து இந்த மண்ணின் மைந்தராக தன்னை மாற்றி கொண்டு, மக்கள் பணியில் கலெக்டர் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்.

மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நல்ல விஷயங்களிலும் மாவட்ட நீதிமன்றம் உறுதுணையாகவும், முழுஒத்துழைப்பும் அளிக்கும் என்பதை தெரிவிக்கும் விதமாக குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டேன்.

உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்

சோனாநதி குளத்தில் 30 ஆண்டுகள் ஊற்றே இல்லாமல் இருந்தது என்றும், தூர்வாரும் பணியின் காரணமாக தற்போது தண்ணீர் ஊற்று வருகிறது என்றும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நிலத்தடி நீரை மேம்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குளம் தூர்வாரும் பணியில் கலெக்டருடன் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் புருஷோத்குமார், அமாவாசை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இனியன், உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன், ஊராட்சி செயலாளர்கள் கே.முருகன், எஸ்.டி.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story