வண்டல் மண் எடுத்துச்செல்லும் விவசாயிகள் போக்குவரத்து செலவுக்கு அரசே மானியம் வழங்க வேண்டும்


வண்டல் மண் எடுத்துச்செல்லும் விவசாயிகள் போக்குவரத்து செலவுக்கு அரசே மானியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2017 4:30 AM IST (Updated: 11 Jun 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுத்துச்செல்லும் விவசாயிகளின் போக்குவரத்து செலவுக்கு அரசே மானியம் வழங்க வேண்டும் என்று செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செ.செம்மலை (அ.தி.மு.க.-புரட்சித்தலைவி அம்மா அணி) நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேட்டூர் அணையை தூர்வாரும் வகையில் வண்டல் மண் எடுக்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். பணி தொடங்கப்பட்ட அந்த இடத்துக்கு நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கிருந்த பொதுப்பணித்துறை பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்தவர்களிடம் வண்டல் மண் எடுக்கப்படும் பணியின் விவரங்களை கேட்டறிந்தேன். வண்டல் மண் எடுத்துச்செல்லும் விவசாயிகளிடமும் விவரங்களை கேட்டேன்.

விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளி போடுவதற்காக தனியார் பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஒரு யூனிட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.100 கட்டணம் வசூலிக்கிறார்கள். மேலும், அங்கிருந்து பல கிலோமீட்டர் கடந்து விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு வண்டல் மண்ணை எடுத்துச்சென்று சேர்க்கும் நிலைமை உள்ளது. இதற்கான போக்குவரத்து செலவை கணக்கிட்டு பார்க்கும்போது வண்டல் மண்ணுக்குரிய விலையைவிட அது அதிக தொகையாக உள்ளது.

மானியம் வழங்க வேண்டும்

குடிமராமத்து திட்டத்தில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஏரிகளின் கரையை பலப்படுத்துவதுபோன்று, மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி டிராக்டர் மற்றும் லாரிகளில் பாரம் ஏற்றும் பணியை ரூ.100 கட்டணமின்றி இலவசமாக செய்ய வேண்டும்.

அதேபோன்று வண்டல் மண் எடுத்துச்செல்லும் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு மானியத்தை அரசே வழங்க வேண்டும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளின் நிலத்தின் சர்வே எண், அதற்குரிய நிலப்பரப்பு ஆகியவற்றை கணக்கிட்டு வண்டல் மண் அவர்களின் விவசாய நிலத்தில் கொட்டப்படுகிறதா? என்பதை வருவாய்த்துறையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறும்.

கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

சேலம் மாவட்டத்தில் 949 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஏரிகளில் தூர் எடுப்பதுபோல், இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் ஏரிகளுக்கு மழைநீர் வந்து தேங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்கும் இடத்துக்கு சென்று செம்மலை எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.


Related Tags :
Next Story