15 நாட்கள் ஆகியும் தாயுடன் செல்ல மறுக்கும் குட்டி யானை


15 நாட்கள் ஆகியும் தாயுடன் செல்ல மறுக்கும் குட்டி யானை
x
தினத்தந்தி 11 Jun 2017 4:30 AM IST (Updated: 11 Jun 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து 15 நாட்கள் ஆகியும் செல்ல மறுக்கும் குட்டி யானையை வண்டலூர் பூங்காவில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது அரசச்சூர் கிராமம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு ஒரு வயதே ஆன பெண் குட்டி யானை ஒன்று வந்தது. யானை குட்டி ஊருக்குள் வந்ததை கவனித்த கிராமமக்கள் அதற்கு பழம், பால் ஆகியவற்றை கொடுத்தனர்.

மேலும், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய தலைமையில் உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் ஆகியோர் அந்த குட்டி யானையை மீட்டனர். அப்போது அதன் பின்புற கால் பகுதியில் காயம் இருந்தது.

தாயுடன் செல்ல மறுப்பு

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை கொண்டு அந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பிறகு குட்டி யானையை அய்யூர் காப்புக்காட்டில் அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானைக்கூட்டம் அருகே குட்டி யானையை வனத்துறையினர் கொண்டு விட்டதும், அது தாய் யானையுடன் செல்லாமல் திரும்ப ஓடி வந்து விடுகிறது.

மீண்டும் வனப்பகுதிக்குள் குட்டி யானையை வனத்துறையினர் விடுவதும், சிறிது நேரத்தில் குட்டி யானை அரசச்சூர் கிராமத்திற்குள் திரும்பி வருவதும் தொடர்ந்து வந்தது. இதையடுத்து குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அய்யூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான விடுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டி யானைக்கு பால், பழம் ஆகியவை தினமும் வழங்கப்பட்டன. மேலும் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

பூங்காவில் விட முடிவு

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பொதுமக்களுடன் நன்கு பழகி விட்ட குட்டி யானை, தாய் யானையுடன் செல்ல மறுப்பதால் அதனை சென்னை வண்டலூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து பயிற்சி பெற்ற 2 பாகன்கள் அய்யூர் வந்துள்ளனர். அவர்கள் குட்டி யானைக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:-

குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க முயற்சி எடுத்தும் முடியவில்லை. தற்போது இந்த குட்டி யானை பொதுமக்களுடன் நன்கு பழகி விட்டது. இதை வன உயிரியல் பூங்காவில் விட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story