காப்பகத்தில் இடப்பற்றாக்குறை: 56 மாணவிகள் தங்குவதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்


காப்பகத்தில் இடப்பற்றாக்குறை: 56 மாணவிகள் தங்குவதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:30 AM IST (Updated: 11 Jun 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

காப்பகத்தில் இடப்பற்றாக்குறை: 56 மாணவிகள் தங்குவதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,

காப்பகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 56 மாணவிகள் தங்குவதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் காப்பகம்

மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை கரும்பாலை பகுதியில் உள்ள அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களில் 56 மாணவிகளை இடப்பற்றாக்குறையை காரணம்காட்டி அங்கு தங்குவதற்கு, காப்பக சூப்பிரண்டு மறுத்துள்ளார். இதனால் 56 பேரும், அவர்களுடைய உறவினர்களும் மாற்று வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, குழந்தைகள் தங்கி படிக்க அங்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், மாணவிகள் தற்போது படிக்கும் பள்ளியிலேயே படிப்பை தொடரவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

35 பேருக்கு தான் இடம்

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “இளஞ்சிறார் நீதிச்சட்டப்படி காப்பகத்தில் ஒரு குழந்தைக்கு 40 சதுர அடி இடம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், அன்னை சத்தியா குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகள் தங்க வைக்கப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சமூக நலத்துறை உத்தரவிட்டது. அங்கு மொத்தம் 112 குழந்தைகள் படித்து வந்தநிலையில், 20 மாணவிகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். ஒரு மாணவி பெற்றோருடன் சென்றுவிட்டார். எனவே தற்போது 35 பேர் தங்குவதற்கு காப்பகத்தில் வசதி உள்ளது. மீதமுள்ள 56 மாணவிகள் தங்குவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சேவா ஆசிரமத்தில் 40 இடங்களும், தத்தனேரி காப்பகத்தில் 6 இடங்களும், விளாங்குடி காப்பகத்தில் 5 இடங்களும், கடச்சனேந்தல் காப்பகத்தில் 5 இடங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே அங்கு மாணவிகளை தங்க வைக்கவும், அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது“ என்று தெரிவித்தார்.

தாமதம் ஏன்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த காப்பகத்தில் கடந்த டிசம்பர் மாதமே அளவுக்கு அதிகமாக குழந்தைகள் இருப்பது தெரிந்தும் மாற்று ஏற்பாடுகளை செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்“ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல், “குழந்தைகளை தங்க வைக்க தனியார் கட்டிடங்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர்“ என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், “காப்பகத்தில் தங்க வைக்க 35 மாணவர்களை எந்த வகையில் தேர்வு செய்தீர்கள்“ என்று கேட்டனர்.

அதற்கு, “பிளஸ்–2 மாணவிகள் 20 பேர், தாய் தந்தையற்ற குழந்தைகள் 10 பேர், தொடக்கப்பள்ளி மாணவிகள் 5 பேர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்“ என்று அரசு வக்கீல் தெரிவித்தார்.

இதனையடுத்து மனுதாரர் வக்கீல், “அன்னை சத்தியா காப்பக பகுதியிலேயே இட வசதி இருக்கிறது. கூடுதல் கட்டமைப்பு வசதிக்கான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது“ என்றார்.

ஏற்பாடு செய்ய உத்தரவு

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

“56 மாணவிகள், அவர்களுடைய உறவினர்களை மாநகராட்சி திருமண மண்டபத்திலோ, தனியார் திருமண மண்டபத்திலோ உடனடியாக தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் செய்து கொடுக்க வேண்டும். மாணவிகளை விடுதி மற்றும் பள்ளிகளில் சேர்க்கும் வரை இந்த வசதிகளை வழங்க வேண்டும்.

இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறையின் மண்டல துணை கமி‌ஷனர் வருகிற 15–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், காப்பகப்பகுதியில் கூடுதல் கட்டிட வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக மதுரை மாநகராட்சி கமி‌ஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.“

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 15–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story